
நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டு இறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக் கட்டருகே
அவரது சடலம் குருதியிற் கிடந்தது.
இரவின் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
“எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்”, என்று சினந்தனர்.
‘”இல்லை சேர்
தவறுகள் எதுவும் நிகழவேயில்லை.
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால் தான்”..... என்றனர்.
“சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை”
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்.
சிகாலோக வாத சூத்திரத்தினைக்
கொளுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது.
தம்மபதமும் தான் சாம்பல் ஆனது.
(சிகாலோக வாத சூத்திரம், தம்மபதம் ஆகியன பெளத்தமத அற நூல்கள்)
- நுஃமான் -