Wednesday, April 28, 2010

தேர்தல் முடிவுகள் பற்றி திரு. இரா . துரைரட்ணம் அவர்கள் எழுதிய கட்டுரையின் பகுதி -02 இற்கான மறுப்புக்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - பகுதி - 01


இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் என்ற தலைப்பில் திரு. இரா . துரைரட்ணம் அவர்கள் எழுதிய கட்டுரையின் பகுதி -02 இற்கான மறுப்புக்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - பகுதி - 01.

இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் என்ற தலைப்பில் திரு இரா துரைரட்ணம் அவர்கள் எழுதிய கட்டுரையின் பகுதி - 02 இல் பல தவறான தகவல்கள் - கருத்துக்கள் - முடிவுகள் தரப்பட்டுள்ளன. முதற் கட்டமாக அவர் தனது கட்டுரையின் தலைப்பாகப் போட்டிருந்த "யாழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிக்கவில்லை " என்ற விடயம் தொடர்பாக அவர் கூறிய கருத்துக்களின் மறுபக்கத்தைப் பார்ப்போம்.

பொதுவாக தரவுகள் - தகவல்களின் அடிப்படியில் ஆய்வினை மேற்கொண்டு முடிவினைப் பெறுவதே சரியான ஆய்வாகும். ஆனால் இங்கு கட்டுரையாளர் முடிவினை எடுத்துவிட்டு அதனை நிரூப்பிபதற்க்கு தவறான தகவல்களையும் தரவுகளையும் தவறான முறையில் கையாண்டுள்ளார். எங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலியான வெற்றியை மக்கள் புரிந்து விடுவார்களோ? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி களங்கப்பட்டு விடுமோ என்ற பய உணர்வினால் தனக்கேற்ப்பட்ட மன உளைச்சலை சீர் செய்வதற்காகக எழுதப்பட்ட கட்டுரையே அதுவாகும்.

இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களம் 2008 ம் ஆண்டு எடுத்த கணக்கீடு என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. உண்மையில் 2007 ம் ஆண்டு தான் குடிசன மதிப்பீடு யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை தான் 2008 ம் ஆண்டு வெளிவந்ததேயொழிய தரவுகள் 2007 ம் ஆண்டுக்குரியவையாகும். மேலும் இக்குடிசன மதிப்பீடு யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி நிர்வாக மாவட்டம் இதில் அடங்கவில்லை.

யாழ் தேர்தல் மாவட்டம் என்பது யாழ்ப்பாணம், கிளிநொச்சி என்ற நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகும். எனவே யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தின் சனத்தொகையை அடிப்படியாகக் கொண்டு யாழ் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் தொகையை மதிப்பிடுவது சரியானதாக இருக்க மாட்டாது. இதனைக் கட்டுரையாளர் கவனிக்கத் தவறி விட்டார்.
2007 ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின் படி யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்தச் சனத்தொகை 5,59,619 பேராகும். இதில் 3,70,620 பேர் 18 வயதிற்கு மேற்ப்பட்டவர்களாவார். அவ்வாறாயின் இவர்களே யாழ் நிர்வாக மாவட்டத்தின் வாக்காளர் தொகையாகும். இதனைக் கட்டுரையாளரும் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் அவர் இத்தொகையை யாழ் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் தொகையாக எடுத்துக் கொண்டு வாக்காளர் தொகையைக் குறைத்துக் காட்டி தனது முடிவினை நியாயப்படுத்த முற்படுகின்றார். இவ் வாக்காளர் தொகையினுள் பின்வருவோர் உள்ளடக்கப்படவில்லை.

1 . கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் தொகை
2 . இடம் பெயர்ந்தோர் வாக்காளர் தொகை - புத்தளம் மற்றும் ஏனைய இடங்களில் இடம்பெயர்ந்திருக்கும் முஸ்லிம் வாக்காளர் தொகை.

இப் பொதுத் தேர்தலில் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 11 ,019 பெரும் இடம்பெயர்ந்தோரில் 6970 பேரும் வாக்களித்திருந்தார்கள். இவர்களின் மொத்தத் தொகை
17,989 பேராகும். இம்முறை யாழ் தேர்தல் மாவட்டத்தில் 1,68,277 பேர் வாக்களித்திருந்தனர். இதிலிருந்து 17989 பேரை நீக்கிய பின்னர் உள்ள தொகையான
1,50,288 பேர் யாழ் நிர்வாக மாவட்டத்தில் உள்ள 10 தேர்தல் தொகுதிகளிலும் வாக்களித்திருந்தனர். யாழ் நிர்வாக மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி உள்ள 3,70,620 பேரில் 1 ,50 ,288 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன் படி 40 சதவீதத்தினர் மட்டுமே வாக்களித்துள்ளனர். யாழ் மாவட்டத்தின் 10 தேர்தல் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு எதுவித தடைகளும் இருக்கவில்லை. இவர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்று கட்டுரையாளர் கூற மாட்டார் என நம்புகிறேன். இந்நிலையில் இலங்கையில் யாழ் மாவட்டத்திலேயே வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்துள்ளது. என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். (கட்டுரையாளருக்கு இது கசப்பான உண்மையாக இருக்கும் ) அண்மையில் நடிபெர்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ் நிர்வாக மாவட்டத்தில் உள்ள 10 தேர்தல் தொகுதிகளிலும் 1,68,419 பேர் வாக்களித்திருந்தனர். ஆனால் பொதுத் தேர்தலில் 1,50,288 பேர் வாக்களித்திருந்தனர். இதன் படி இப்பொதுத் தேர்தலில் வாக்களித்தோர் தொகை ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடும் போது 18,131 பேரால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிங்கள தேசத்தின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் காட்டிய அக்கறையைக் கூட தமிழ்த் தேசத்தின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் காட்டாமல் இருந்தமைக்கு திரு துரைரட்ணம் அவர்கள் எவ்வாறு விளக்கமளிக்கப் போகிறார்? பொதுவாக எந்தவொரு தேர்தலிலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 70 - 75 சதவீதத்தினரே வாக்களிப்பதுண்டு. அவ்வாறாயின் யாழ் நிர்வாக மாவட்டத்தின் உண்மையான வாக்காளர் தொகையான 3,70,620 பேரில் ஏறத்தாழ 2,60,000 பேர் (70 சதவீதம் ) இத்தேர்தலில் வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் வாக்களித்தோர் தொகை 1,50,288 பேர் மட்டுமேயாகும். அவ்வாறாயின் ஏறத்தள 1,10,000 பேர் வாக்களிக்காமைக்கு என்ன காரணம்?

இப்பொதுத் தேர்தலில் இலங்கை முழுவதிலும் வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இத் தேர்தலில் மக்கள் பெரிதும் அக்கறை காட்டவில்லை என்பது உண்மை தான். தென்னிலங்கையில் மக்கள் இத்தேர்தலில் ஆர்வம் காட்டாமைக்குப் பல காரணங்கள் உண்டு. இத் தேர்தலில் அரசாங்கம் பெரும் வெற்றியடையும் என்பது எல்லோராலும் எதிர்பர்க்கப்பட்டதொன்றாகும். அரசாங்கம் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மை பெறுமா இல்லையா என்பதே இத் தேர்தலில் பிரச்சினையாக இருந்தது. எதிர்க்கட்சிகள் கூட அரசாங்கம் தோற்கும் என்று ஒரு போதும் கூறவில்லை. மாறாக மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது. என்று தான் பிரச்சாரம் செய்தன.எனவே சிங்கள தேசத்து மக்களுக்கு இத் தேர்தல் சுவாரஸ்யமற்றதாகி விட்டது. ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்த அணி தான் நிச்சயம் வெல்லும் என்று உறுதியாகத் தெரியுமாயின் அப்போட்டியினைப் பார்வையிடுவதற்கு அவ்வணியின் ஆதரவாளர்களே பெருமளவில் அரங்கிற்குச் செல்வார்கள். அதே போன்றே இத் தேர்தலில் அரசாங்கத்தின் ஆதரவாளர்களே பெருமளவில் வாக்களிக்கச் சென்றனர். எதிர்க்கட்சி வாக்காளர்களோ அல்லது கட்சி சார்பற்ற வாக்காளர்களோ இத் தேர்தலில் அதிகம் அக்கறை காட்டவில்லை. இதனாலேயே தென்னிலங்கையில் வாக்களிப்பு வீதம் குறைவாகக் காணப்பட்டது.

ஆனால் யாழ் மாவட்டத்தின் தேர்தல் களம் இவ்வாறானதல்ல. இப்போதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 15 கட்சிகளும் 12 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. இத்தேர்தலின் பொது மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் போல யாழ் மாவட்டத் தேர்தல் வரலாற்றில் எத் தேர்தலிலும் மேற்கொள்ளப்பட்டது கிடையாது. அந்தளவிற்கு யாழ் மாவட்டத்தில் தேர்தல் களைகட்டியிருந்தது (வேட்பாளர்கள் மத்தியில் மட்டும்) 324 வேட்பாளர்களும் இத்தேர்தலில் செலவிட்ட பணம் பல கோடிகளைத் தாண்டியிருக்கும். அதிலும் நான்கு அல்லது ஐந்து வேட்பாளர்கள் ஒவ்வொருவரினதும் தேர்தல் செலவுகள் ஒரு கோடி ரூபாவிற்கும மேல். இவ்வாறான நிலையிலும் கூட ஏன் மக்கள் தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு.

1 . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டதினால் மக்களுக்கு ஏற்ப்பட்ட விரக்தி மனப்பான்மை.

2 . உண்மையில் தமிழ்த் தேசியத்தின் பால் உறுதியாக நிற்பவர்கள் யார் என்பதை இனம் காண்பதில் மக்களுக்கு ஏற்ப்பட்ட குழப்பம். வீடு, சைக்கிள் ஆகிய இரண்டு சின்னங்களுக்கும் வாக்களித்ததனால் பல வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இது அறியாமையால் ஏற்ப்பட்டதல்ல. இவ்விரண்டு கட்சிகளும் தங்களுக்குத் தேவை என்ற மன உணர்வின் வெளிப்பாடே இதுவாகும்.

3 . தங்களது உரிமைகள் தொடர்பாக பாராளுமன்றத்திற்க்குப் போய் யாரும் எதனையும் செய்ய முடியாது என்று மக்கள் நினைத்தமை.- பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை இழந்தமை.

4 . இளைஞர்கள் இத்தேர்தலில் பெருமளவு அக்கறை காட்டாமை.

5 . அதிகளவு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் இத் தேர்தலில் போட்டியிட்டதனால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு.

6 . சில கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட அளவுக்கதிகமான விளம்பரங்களினால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு. இத்தேர்தலில் செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை அகதி முகாம்களில் வாழும் குடும்பங்களின் புணர்வாழ்விற்குச் செலவிட்டிருக்கலாமே எனப் பலர் ஆதங்கப்பட்டனர்.

'நடைபெற்ற தேர்தலில் எந்தக்கட்சியும் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு கோரவில்லை. வெளி நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களும் பகிஸ்கரிப்புக் கோரிக்கையை விடவில்லை. எனவே தோல்வி அடைந்தவர்கள் வாக்களிக்காமல் இருந்த மக்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது வேடிக்கையான விடயம்.' இது உங்கள் கூற்று


தமிழ் மக்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க மாட்டார்கள். யாராவது சொல்வதைக் கேட்டுத்தான் செயற்படுவார்கள் என்பது தான் கட்டுரையாளரின் இக்கருத்தின் தொனியாகும். யாழ்ப்பாணத்து மக்கள் புத்திசாலிகள் என்று ஒருபக்கம் கூறிக் கொண்டு அவர்கள் சுய சிந்தனையற்றவர்கள் - சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் கூறுவது வேடிக்கையான விடயம். இவ்விடத்தில் 1989 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் யாழ் மக்கள் மேற்கொண்ட தீர்மானத்தை நினைவு கூர்வது நல்லது. இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற அத்தேர்தலில் ஈரோஸ் என்ற அமைப்பு சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டது. அப்போது வட - கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்த ஈ .பி .ஆர் . எல். எவ் அணியும் தமிழர் விடுதலை கூட்டணியும் இணைந்து இந்தியாவின் ஆசியோடு இத்தேர்தலில் போட்டியிட்டது. (இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் அன்று ஈ .பி .ஆர் . எல். எவ் அணியில் போட்டியிட்டமை ஒரு மேலதிகத் தகவல்)சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டவர்களின் பெயர் விபரங்கள் கூட மக்கள் அறிந்திருக்கவில்லை. இவ்வாறான நிலையிலும் கூட அச்சுயேட்சைக் குழு 63 சதவீதமான வாக்குகளைப் பெற்று மொத்தமாகவுள்ள 11 ஆசனங்களில் 8 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. ஒரு சுயேட்சைக்குழு ஒரு மாவட்டத்தில் இவ்வாறான மாபெரும் வெற்றியைப் பெற்றது இலங்கையின் தேர்தல் வரலாற்றிலேயே இது தான் முதலும் கடைசியுமாக இருக்கும். இங்கு இச் சுயேட்சைக் குழுவிற்குத்தான் மக்கள் வாக்களிக்க வேண்டுமென யாரும் கோரிக்கை விடவில்லை. அன்றைய சூழ்நிலையில் இச்சுயேட்சைக்குழு எவருடைய ஆதரவோடு தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என்பதை மக்கள் தாங்களாகவே ஊகித்துக் கொண்டு வாக்களித்தார்கள். எனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும். எப்போது தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும். என்பவற்றை எல்லாம் மக்களுக்கு யாரும் கூற வேண்டிய அவசியமில்லை.

யாழ் நிர்வாக மாவட்டத்தின் (10 தேர்தல் தொகுதிகளின் ) வாக்காளர் கையில் ஏறத்தாழ
1,10,000 பேர் (30 சதவீதத்தினர்) இத்தேர்தலைப் புறக்கணித்துள்ளனர் என்பதே உண்மை நிலையாகும். மற்றுமொரு 30 சதவீதத்தினர் வழமையாக எந்தவொரு தேர்தலிலும் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை. இதன் படி யாழ் நிர்வாக மாவட்டத்தில் (10 தேர்தல் தொகுதிகள் ) 40 சதவீதத்தினர் மட்டுமே வாக்களித்துள்ளனர். எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை என்று கூறுபவர்கள் தமது வெற்றி களங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகச் செய்யும் பிரச்சாரமேயாகும்.

இரா துரைரத்தினம் அவர்களின் கட்டுரையில் கூறப்பட்ட ஏனைய விடயங்களின் மறு பக்கத்தை பகுதி - 02 இல் பார்ப்போம்.

S.வரதராஜன் B.A (Hons)
varatharajaninfo@gmail.com

Sunday, April 11, 2010

யாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் சில உண்மைகள்.


யாழ் தேர்தல் மாவட்டத்தின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் தொகை 7,21,359 பேராகும். ஆனால் இது சரியான தரவு அல்ல. 2007 ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சனத்தொகைக் கணிப்பீட்டின் படி மாவட்டத்தின் மொத்தச் சனத்தொகை 5,59,619 பேராகும். இதில் 3,70,620 பேர் 18 வயதிற்கு மேற்ப்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்காவிட்டாலும் கூட யாழ் மாவட்டத்தின் உண்மையான வாக்காளர்களின் தொகை இதனை அண்மித்ததாகவே இருக்கும். இதனோடு கிளிநொச்சி தேர்தல் தொகுதி வாக்காளர் தொகையையும் (பதிவு செயப்பட்ட வாக்காளர் தொகை 90,811 பேர் - இதில் அரைவாசித் தொகையினை) சேர்க்கும் போது யாழ் தேர்தல் மாவட்டத்தின் உண்மையான வாக்காளர் தொகை ஏறத்தாழ நான்கு லட்சம் பேர் என மதிப்பிடலாம்.

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 1,85,132 பேர் யாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்களித்திருந்தனர். இது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 25.7 சதவீதமாகும். எனினும் உண்மையாகவுள்ள வாக்காளர் தொகையின் படி இது 46.3 சதவீதமாகும் தற்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் 1,68,277 பேர் வாக்களித்துள்ளனர். இது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 23.3 சதவீதமாகும். எனினும் உண்மையாகவுள்ள வாக்காளர் தொகையின் படி இது 42.7 சதவீதமாகும். இத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு யாழ் மாவட்டத்து வாக்காளர்களின் மனோநிலையை ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தோர் தொகையிலும் பார்க்க பொதுத் தேர்தலில் வாக்களித்தோர் தொகை 16,855 பேரால் குறைவடைந்துள்ளது. இந்த நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் மக்கள் கட்டிய ஆர்வத்தைக் கூட தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் காட்டவில்லை என்பதனையே இது புலப்படுத்துகின்றது. இப்பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 15 கட்சிகளும் 12 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. சுவர்களின் நிறங்களே தெரியாதவாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், வீதியெங்கும் வீசி இறைக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வேட்ப்பாளர்களின் விளம்பரங்களால் நிரப்பப்பட்ட பத்திரிகைகள், வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று செய்த பிரச்சாரங்கள், மக்களைக் கவர்வதற்காக இசைக்குழுக் கச்சேரிகளுடன் கூடிய பொதுக்கூட்டங்கள் இவை அனைத்தும் செய்யப்பட்டும் கூட வாக்காளர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்து வருவதில் தோல்வியே ஏற்ப்பட்டுள்ளது.

பொதுவாக தேர்தலில் 70- 75 சதவீத வாக்குகள் அளிப்பது வழமை.25-30சதவீதமான வாக்காளர்கள் வழமையாகத் தேர்தலில் வாக்களிப்பதில்லை. இதன் படி ஏறத்தாழ 2,80,000 வாக்காளர்கள் இத் தேர்தலில் வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் 1,68,277 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன் படி ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட வாக்காளர்கள் இத் தேர்தலில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இவர்கள் யார்? இவர்கள் வாக்களிக்க முன் வராமைக்கு என்ன காரணம்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு (மகிந்த ராஜபக்சேவிற்கு)44,154... மேலும் பார்க்கவாக்குகள் கிடைத்திருந்தன. இப்போதுத்தேர்தலில் இக்கட்சிக்கு 47,622வாக்குகள் கிடைத்தன. இது அனைவரும் எதிர்பார்த்ததே. அரசாங்கத்திற்கு ஆதரவான வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர்.அவ்வாறாயின் தேர்தலில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கி நின்ற ஒரு லட்சம் வாக்காளர்கள் தமிழ்த்தேசியத்தின் பக்கம் நிற்பவர்களே ஆவார். தமிழ்த் தேசியத்திற்க்கான மக்கள் முன்னணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரண்டும் தமிழ்த்தேசியத்தின் பெயரிலேயே இத்தேர்தலில் போட்டியிட்டன. எனவே உண்மையில் தேசியத்தின் பக்கம் யார் நிற்கின்றார்கள் என்பதனை இனம் காண்பதில் மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. பத்திரிகைகள் நடு நிலைமையில் நின்று இரண்டு பேரினதும் கருத்துக்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்குமேயானால் மக்களுக்குத் தெளிவு ஏற்ப்பட்டிருக்கும். அதிகளவு மக்களைச் சென்றடைகின்ற ஒரு பத்திரிக்கை நிறுவனத்தின் அதிபர் கூட்டமைப்பின் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்டதனால் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை வசை பாடும் கட்டுரைகளையும் செய்திகளையுமே அப்பத்திரிகை தொடர்ந்து வெளியிட்டது. இது ஓர் எதிர்மறையான விளைவுகளையே ஏற்ப்படுத்தியது. அதாவது கூட்டமைப்பிற்க்குப் போட்டியாக தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்ற ஒரு கட்சியும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றது என்றொரு செய்தியை மட்டும் மக்களுக்கு எடுத்துச் சென்றது. ஆனால் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியே தமிழ்த் தேசியத்தை உறுதியாகப் பற்றி நிற்கின்ற கட்சி என்ற உண்மை மக்களுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. இந்நிலையிலேயே இரண்டு கட்சிகளும் ஒன்றையே கூறுகின்றன என்ற ஒரு தவறான முடிவிற்கு மக்கள் வந்து, எதனை ஆதரிப்பது என்ற குழப்ப நிலை மக்களுக்கு ஏற்ப்பட்டது. இந்நிலையிலேயே இத்தேர்தலில் இருந்து மக்கள் ஒதுங்கும் நிலை ஏற்ப்பட்டது. தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசிக்கின்ற இந்த ஒரு லட்சம் வாக்காளர்களும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் பக்கம் நிற்க வேண்டியவர்கள். ஓர் சரியான ஊடக பலம் இருந்திருக்குமேயானால் இவர்களை வாக்களிப்பு நிலையத்திற்கு வரவழைத்திருக்க முடியும். தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியும் மாபெரும் வெற்றியடைந்திருக்கும்.

யாழ் மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்தமைக்கு இங்கிருந்து வெளிவரும் பத்திரிகைகள் தார்மீக ரீதியில் பொறுப்பேற்க வேண்டும். இவை பத்திரிகை தர்மத்தை மீறி நடுநிலைமை தவறி செயற்ப்பட்டதனால் வந்த விளைவே இதுவாகும்.

சி. வரதராஜன்.

Friday, April 2, 2010

எனது அன்பான தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் மக்களே....! உங்களனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள்.


காலத்தின் தேவைகருதி தமிழ்த்தேசியத்தை மீண்டும் உரத்து வலுப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களில் உள்ள உங்கள் குடும்பத்தினரை உறவினர்களை அயலவர்கள் நண்பர்கள் அனைவரையும் தமிழ் தேசிய மக்கள் முன்ணனிக்கு ஆதரவு வழங்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன்.

தயவுசெய்து தாயகத்தில் உள்ள உங்கள் சகல உறவுகளையும் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு தமிழ்தேசியத்தை ஆணித்தரமாக இதயசுத்தியுடன் வலியுறுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு அவர்களையும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களுக்கும் இந்த செய்தியை தேசிய கடமையை தெளிவுபடுத்தி தெரியப்படுத்துமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

யாழ், திருமலை தேர்தல் மாவட்டங்களில் தமிழ்தேசியமானது அகில இலங்கை காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது என்பதை தெளிவுபடுத்துவதுடன் ஆகக்குறைந்தது 10 பேருக்காவது இந்த செய்தியை காலத்தின் கட்டாயத்தை தெரியப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

“பாராளுமன்றம் போய் எமக்கு எந்தவித உரிமைகளும் கிடைத்துவிடப் போவதில்லை. நாம் எல்லோரும் அறிவோம் ஆனால் எமது தேசியத்திற்காக 35000 மேற்பட்ட சகோதர சகோதரிகளினதும் 150000 மேற்பட்ட எமது மக்களினதும் தியாகங்களை விலை பேசுபவர்கள் அந்நிய சக்திகளின் கைப்பொம்மைகளாக செயல்படுபவர்கள் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் போகக் கூடாது என்பதே முக்கியமானத ஆகும்.

களமும் புலமும் ஒரே பாதையில் பயணித்து எமது அபிலாசைகளை அரசியல்ரீதியாக அடைய களத்திலே தேசியத்தின் மீது உண்மையாக பற்றுக்கொண்டவர்கள் எமது மக்களின் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்படவேண்டும்.

தேசியத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டவர்கள் இன்று யாழ், திருமலை தேர்தல் மாவட்டங்களில் தமிழர் தேசிய மக்கள் முன்ணனியில் போட்டியிடுகின்றார்கள். எனவே அவர்களை எமது பிரதிநிதிகளாக இவர்களுக்கு வாக்களித்து வெற்றியிட செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது தாயகத்தில் உள்ள மக்கள் என்றும் தேசிய உணர்வோடும் தேசியத்தோடும் ஆழ வேரூன்றி உள்ளார்கள். அதனை கடந்தகால தேர்தலகள், பொங்குதமிழ் நிகழ்வுகளில் இராணுவ அடக்குமுறைக்குள் இருந்து வெளிப்படத்தியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் தேர்தலில் தமிழ்தேசியத்திற்கான மக்கள் முன்ணனி தேசியத்தை நிலைநிறுத்தி போட்டியிடுகின்றது என்ற செய்தி எல்லா மக்களையும் சென்று அடையவில்லை.

எனவே மக்களுக்கு தெளிவான செய்தியை அதாவது தமிழ்த்தேசியம் இன்று சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது. என்பதை தெரிவித்தாலே போதும் எமது மக்கள் தங்கள் ஆதரவுகளை வாக்குப் பலத்தால் வெளிப்படுத்துவார்கள்.

எனவே காலத்தின் தேவை உணர்ந்து மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் துயரம் அரசியல் மரபில் அமைந்துவிடாதிருக்க முள்ளியவாய்க்காலில் பிராந்திய, சிங்கள கூட்டு சக்திகளால் புதைக்கப்பட்ட எமது தமிழ்தேசிய தேரை தொடர்ந்து இழுத்து எமது அபிலாசைகளை 35000 மேற்பட்ட எங்கள் சகோதர சகோதரிகளின் இலட்சிய கனவை அரசியல்ரீதியில் ( களமும் புலமும் ஒன்றிணைந்து) அடைய நாம் அணைவரும் தமிழ்த்தேசிய முன்ணனியின் வெற்றிக்காக உழைப்போம். தமிழ்த்தேசியம் என்றும் சாய்வதில்லை என்பதை உலகிற்கும் சிங்களத்திற்கும் உணர்த்துவோம்.

அத்தோடு 1949ல் இருத்து அரசியல் செயற்பாட்டை ஆரம்பிப்போம் என்று கூறும் அந்நிய சக்த்திகளின் கைப்பொம்மைகளுக்கும் வெற்றுக்கோசம் இடுபவர்களுக்கும் கூட்டமைப்பின் தவறான தலைமைகளுக்கும் சரியான பாடம் புகட்டுவதோடு பேரினவாத கட்சிகளையும் அதன் அடிவருடிகளையும் தோற்கடிக்க பாடுபடுவோம்.

“ஈழத்தவர்கள் நாம் எல்லோரும் உலகத் தாய் வயிற்று மைந்தர்
நசிந்து இனி கிடக்கமாட்டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்”

- என்ற பொங்கு தமிழ் வாசகங்களுக்கு வடிவம் கொடுத்து செயற்படுவோம்.

எனக்காக இந்த உதவியை செய்யாவிட்டாலும் எங்களுக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த 35000ற்கு மேற்பட்ட உங்கள் சகோதர சகோதரிகளின் தியாகங்கள் விலை போகாமல் இருக்க அவர்களின் கனவுகள் தொடர்ந்து எடுத்துச் செல்லவாவது இந்த சிறிய கடமையை நாம் அனைவரும் தமிழர் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற கொள்கைகளின் வழி நின்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்வோமாக.
- உங்களில் ஒருவன் -

Wednesday, March 31, 2010

ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வரை இக்குடியேற்றங்களை தடுக்க முடியாது.


திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு புள்ளிவிபரங்களுடன்.....!




சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல்: தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர் வாக்களிப்பர் என கனேடிய தமிழர் பேரவை நம்பிக்கை


இலங்கைத் தீவில், தங்கள் வாழ்வினில் தாக்கத்தைக் கொடுக்கும் பிரச்சினைகளிற்கு அரசியற் குரல் ஒன்றினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இத் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வது தமிழர்களிற்கு முக்கியமானதாகும்.

இவ்வாறு கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் நாள் நடக்க உள்ள சிறிலங்கா நடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கனடியத் தமிழர் பேரவையானது அனைத்துத் தமிழ் கனடியர்களையும் சிறீலங்காவில் வசித்து வரும் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்க இருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றது.

தமிழர்களிற்கு இலங்கைத் தீவில் தங்கள் வாழ்வினில் தாக்கத்தைக் கொடுக்கும் பிரச்சினைகளிற்கு அரசியல் சார்ந்த குரலொன்றினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இத் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வது முக்கியமானதாகும்.

“தமிழர்கள் சிறீலங்காவில் தங்கள் தலைவர்கள் மற்றும் கட்சிகள் எந்தப் பாதையைத் தெரிவு செய்வது என்பது தொடர்பக முனைப்புடன் முடிவு செய்வார்கள். எமது நிலைப்பாடானது அவர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் வேளையில் நாம் அவர்களுடன் ஒன்றிணைந்து நிற்போம்,” இவ்வாறு கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன் தெரிவித்தார்.

“கனடியத் தமிழர் பேரவையானது நடுநிலை வகிப்பதுடன் அங்கு வாழும் மக்கள் தேசியம், தாயகம் மற்றும் அவர்களிற்குரிய சுயநிர்ணய உரிமை ஆகிய முக்கிய மூன்று கொள்கைகள் அடிப்படையில் வாக்களிப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறது.”

கனடியத் தமிழர் தமிழர் பேரவையானது அண்மைய அதிபர் தேர்தலில் இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தைக் கண்டிப்பதுடன் மக்களை வாக்களிக்க விடாது தடுக்கும் இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாது என நம்பிக்கை கொள்கிறது.

“வாக்காளர்களிற்கு அவர்கள் வாக்களிப்பதற்குப் பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மக்கள் தங்கள் ஜனநாய உரிமையான வாக்களித்தலை இடையூறு செய்யும் வண்ணம் எந்தவொரு வன்முறையோ, பயமுறுத்தலோ, அல்லது கட்டாயப்படுத்தலோ இடம்பெறக் கூடாது.”

இவ்வாறு கனடியத் தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் தெரிவித்தார்.