Thursday, December 24, 2009
நேற்று நிகழ்ந்தது.
கட்டிச் சென்ற கோட்டையின் அருகாய்
பல்லாயிரம் பேர்கள் உயிரிழந்தார்கள்”
தயவு செய்து புள்ளி விபரங்களில்
உயிர்களை எண்ணாதீர்கள்.
அந்த இளைஞர்களின் சடலங்களை நீங்களெவரும்
கண்டதேயில்லை.
ஆறாய் ஓடிய குருதியைத் தானும்
அறிந்திருக்க மாட்டீர்கள்.
வெடிகளில் சிக்கி
அலறியபடியே இறந்த அவர்களிடம்
என்னதைப் போலவே கனவுகள் இருந்திருக்கும்.
முள்ளிவாய்க்கால்
காற்றுக்கு மட்டும் தெரிந்த அந்தக் கனவுகளை விவரிக்க
என்னிடமும் தான் வார்த்தைகள் இல்லை.
நாட்டை விட்டோடிய
லட்சம் பேரை விடவும் அவர்களிடமோ
நம்பிக்கை இருந்தது.
நாளைக்குச் சந்தியிலே சிலையெழுப்பி
அவர்களை “நினைவுகூர”
யாரும் முயலக்கூடும்.
வேண்டாம் பலவந்தமாக
அவர்களை யாரும் நினைவுறுத்த வேண்டாம்.
எனது தேசத்தின் மனிதர்கள்
என்று நான் அவர்களை
ஒவ்வோர் போதும் நினைவு கூர்வேன்
என்னைப் போலவே எனது தேச மக்களும்.
- இளவாலை விஜயேந்திரம் -
Monday, November 30, 2009
இந்திய மயானம்

சகோதர சகோதரிகளின்
பிணவாடை
காற்றில் கலந்து
கண்ணீர் வடிக்கிறது
ஈழ நிலத்தில் ........
நாற்றத்தை
மோப்பம் பிடித்துக் கொண்டே
பூங்கொத்துக் கொடுத்தார்கள்
கொத்துக் கொத்தாய்க்
கொன்றவனுக்கு!
இவர்கள்
நாடு திரும்பியதும்
சட்டென்று
நினைவிற்கு வந்தது
ஒரு கையில் மலமும்
ஒரு கையில் சோறும்
ஒரு மொழி பேசும்
இனத்தை அழித்துவிட்டு
அந்த இனம் பேசும்
மொழிக்கு மாநாடு
வாய் பேசத் தெரியாத
வரலாறு தான் வாழ்த்தும்!
சவப் பெட்டியில்
தமிழர் உரிமைகள் ........
கால் ஒடிந்த சனநாயகம்
தூக்கிப் போகிறது
இந்திய மயானத்திற்கு ...........!
நன்றி
-கவிபாஸ்கர்-
Saturday, October 31, 2009
புத்தனின் நிர்வாணம்

போதி மரத்தின் கீழ்
அன்று ஒரு நாள்
மூடிய விழிகளைத்
திறந்தான் புத்தன்.
கால்களை நனைத்தது
குருதி ஆறு
அவனது தத்துவம்
கிடந்து தவித்தது.
அதிர்ந்து,
எழுந்து ,
ஓடினான்.
காற்றாய், கடலாய்,
திசைகள் தோ்றும்.........
எங்கேயும் அவனது ஞானம்
ஒரு துளியாவது.......?
தார்மீக உலகில்
கால்கள் பதிக்க
விரும்பாத மனதுடன்
உலகை வெறுத்ததால்
போதி மரத்தில்
தூக்குப் போட்டுச்
செத்தான் புத்தன்
பரி நிர்வாணமாய் .............!
-ஹம்சத்வதனி -
Monday, September 14, 2009
யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்
யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்.
யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்
எங்கள் குழந்தைகளை
வளந்தவர்களாக்கி விடும்.
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற் சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கி சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைகளினதும் அர்த்தத்தை
இல்லாதொழித்தது.
எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமன்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போயினர்.
அதன் பின்னர்
படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும்
நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்
கேள்வி கேட்காதிருக்கவும்
கேட்ட கேள்விக்கு விடை இல்லாதபோது
மௌனமாயிருக்கவும்,
மந்தைகள் போல எல்லாவற்றையும்
பழகிக் கொண்டனர்.
தும்பியின் இறக்கையை பிய்த்து எறிவதும்
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்த நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.
யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
"வளர்ந்தவர்கள்" ஆயினர்.
-சிவரமணி-