“வந்து போனவன்
கட்டிச் சென்ற கோட்டையின் அருகாய்
பல்லாயிரம் பேர்கள் உயிரிழந்தார்கள்”
தயவு செய்து புள்ளி விபரங்களில்
உயிர்களை எண்ணாதீர்கள்.
அந்த இளைஞர்களின் சடலங்களை நீங்களெவரும்
கண்டதேயில்லை.
ஆறாய் ஓடிய குருதியைத் தானும்
அறிந்திருக்க மாட்டீர்கள்.
வெடிகளில் சிக்கி
அலறியபடியே இறந்த அவர்களிடம்
என்னதைப் போலவே கனவுகள் இருந்திருக்கும்.
முள்ளிவாய்க்கால்
காற்றுக்கு மட்டும் தெரிந்த அந்தக் கனவுகளை விவரிக்க
என்னிடமும் தான் வார்த்தைகள் இல்லை.
நாட்டை விட்டோடிய
லட்சம் பேரை விடவும் அவர்களிடமோ
நம்பிக்கை இருந்தது.
நாளைக்குச் சந்தியிலே சிலையெழுப்பி
அவர்களை “நினைவுகூர”
யாரும் முயலக்கூடும்.
வேண்டாம் பலவந்தமாக
அவர்களை யாரும் நினைவுறுத்த வேண்டாம்.
எனது தேசத்தின் மனிதர்கள்
என்று நான் அவர்களை
ஒவ்வோர் போதும் நினைவு கூர்வேன்
என்னைப் போலவே எனது தேச மக்களும்.
- இளவாலை விஜயேந்திரம் -
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment