Wednesday, March 31, 2010

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல்: தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர் வாக்களிப்பர் என கனேடிய தமிழர் பேரவை நம்பிக்கை


இலங்கைத் தீவில், தங்கள் வாழ்வினில் தாக்கத்தைக் கொடுக்கும் பிரச்சினைகளிற்கு அரசியற் குரல் ஒன்றினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இத் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வது தமிழர்களிற்கு முக்கியமானதாகும்.

இவ்வாறு கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் நாள் நடக்க உள்ள சிறிலங்கா நடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கனடியத் தமிழர் பேரவையானது அனைத்துத் தமிழ் கனடியர்களையும் சிறீலங்காவில் வசித்து வரும் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்க இருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றது.

தமிழர்களிற்கு இலங்கைத் தீவில் தங்கள் வாழ்வினில் தாக்கத்தைக் கொடுக்கும் பிரச்சினைகளிற்கு அரசியல் சார்ந்த குரலொன்றினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இத் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வது முக்கியமானதாகும்.

“தமிழர்கள் சிறீலங்காவில் தங்கள் தலைவர்கள் மற்றும் கட்சிகள் எந்தப் பாதையைத் தெரிவு செய்வது என்பது தொடர்பக முனைப்புடன் முடிவு செய்வார்கள். எமது நிலைப்பாடானது அவர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் வேளையில் நாம் அவர்களுடன் ஒன்றிணைந்து நிற்போம்,” இவ்வாறு கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன் தெரிவித்தார்.

“கனடியத் தமிழர் பேரவையானது நடுநிலை வகிப்பதுடன் அங்கு வாழும் மக்கள் தேசியம், தாயகம் மற்றும் அவர்களிற்குரிய சுயநிர்ணய உரிமை ஆகிய முக்கிய மூன்று கொள்கைகள் அடிப்படையில் வாக்களிப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறது.”

கனடியத் தமிழர் தமிழர் பேரவையானது அண்மைய அதிபர் தேர்தலில் இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தைக் கண்டிப்பதுடன் மக்களை வாக்களிக்க விடாது தடுக்கும் இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாது என நம்பிக்கை கொள்கிறது.

“வாக்காளர்களிற்கு அவர்கள் வாக்களிப்பதற்குப் பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மக்கள் தங்கள் ஜனநாய உரிமையான வாக்களித்தலை இடையூறு செய்யும் வண்ணம் எந்தவொரு வன்முறையோ, பயமுறுத்தலோ, அல்லது கட்டாயப்படுத்தலோ இடம்பெறக் கூடாது.”

இவ்வாறு கனடியத் தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் தெரிவித்தார்.

No comments: